விடைத்தாள் திருத்தும் மையம் மாற்றம்
சிவகங்கை: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் இளங்கோவன் கூறியுள்ளதாவது: 2014க்கு முன்பு வரை மேல்நிலை வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் மையங்கள் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்றது. பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சிக்கல் ஏற்பட்டது.மாவட்டத்தில் இருக்கக்கூடிய முதுகலை ஆசிரியர் எண்ணிக்கையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று இடங்களில் கல்வி மாவட்ட அளவில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் செயல்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை ஆகிய இரண்டு இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் செயல்பட்டது. தற்போது காரைக்குடியில் செயல்பட்ட மையத்தை தேவகோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளனர்.சிங்கம்புணரி, எஸ்.புதுார், திருப்புத்துார் வட்டாரங்களில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியர்கள் மதுரையில் வசிக்கின்றனர். தற்போது அவர்கள் தேவகோட்டை விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வருவது சிரமம். முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்டபோது மாநில தேர்வு துறைக்கு இடம் தேர்வாகி அனுப்பப்பட்டு விட்டது. இனி மாற்றுவது என்பது சிரமம் என தெரிவித்தார்.தமிழ்நாடு தேர்வு துறை இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்று கண்டிப்பாக கடந்த ஆண்டை போலவே காரைக்குடியில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். இதனை மாற்றவில்லை என்றால் எங்கள் அமைப்பின் மாவட்ட செயற்குழு தீர்மானம் நிறைவேற்றி போராட்டம் நடத்தும் என்றார்.