கோயில் வளாகத்தில் கோழிச்சந்தை பக்தர்கள் அவதி
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கோயில் வளாகத்தில் செயல்படும் கோழிச்சந்தையால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.இப்பேரூராட்சியில் வேங்கைபட்டி ரோட்டில் வியாழன் தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. கோழி வியாபாரம் மட்டும் சேவுகப்பெருமாள் கோயில் ரத வீதியில் நடக்கிறது.வேன்களில் கோழிகளை கொண்டு வருபவர்கள் காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரத வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். வளைவில் வாகனங்கள் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இச்சாலை வழியாகத்தான் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். வியாழக்கிழமை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இச்சந்தை இடையூறை ஏற்படுத்துகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. எனவே கோழிச்சந்தையை கோயில் வளாகத்தில் அனுமதிக்காமல் யாருக்கும் இடைஞ்சல் இல்லாத இடத்திற்கு மாற்ற வேண்டும்.