சிவகங்கை நகராட்சியில் வரி பாக்கிக்கு சொத்து ஜப்தி கமிஷனர் எச்சரிக்கை
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் மார்ச் 31க்குள் நகராட்சிக்கு கட்டவேண்டிய வரி பாக்கியை செலுத்த வேண்டும். 25 ஆயிரத்திற்கு மேல் வரி பாக்கி உள்ளவர்களின் சொத்தை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தெரிவித்தார்.சிவகங்கை நகராட்சியில் பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில்வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் வரி கட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். சிவகங்கை நகராட்சியில் 18 ஆயிரத்து 352 சொத்துகளுக்கு ரூ. ஒரு கோடியே 50 லட்சம் பாக்கியுள்ளது. காலி இடங்களுக்கு 13 லட்சத்து 70 ஆயிரமும், 1,068 வணிக நிறுவனங்களுக்கு தொழில் வரி 8 லட்சத்து 87 ஆயிரம், 6 ஆயிரத்து 783 குடிநீர் இணைப்புக்கு ஒரு கோடியே 3 லட்சம், 115 கடைகளுக்கு வாடகை 19 லட்சமும், 7 ஆயிரத்து 495 பாதாள சாக்கடை இணைப்புகளுக்கு ஒரு கோடியே 63 லட்சத்து 45 ஆயிரம் வசூல் செய்ய வேண்டியுள்ளது. கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், நகராட்சி சார்பில் நீண்ட காலமாக பலமுறை அறிவுறுத்தியும் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி கட்டாத சொத்தின் உரிமையாளர்கள் விரைவில் தங்களின் சொத்துக்கான வரிகளை கட்ட வேண்டும்.மார்ச் 31க்குள் ரூ.25 ஆயிரத்திற்கும் அதிகமான தொகை உள்ள வரி கட்ட தவறும் நபர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.