ஜல்லிக்கட்டுக்கு டோக்கன் கிடைப்பதில்லை என புகார்
திருப்புவனம்:ஜல்லிக்கட்டு போட்டிகளில் காலம் காலமாக காளைகளை வளர்த்து வருவோருக்கு அதனை போட்டிகளில் விட டோக்கன் கிடைப்பதில்லை என காளை உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் தை பொங்கலை ஒட்டி பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும். விவசாயிகள் சிலர் வளர்க்கும் காளைகளை அதில் பங்கேற்க வைப்பார்கள். பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லுார், சிறாவயல், கட்டிக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கு ஆன்லைன் மூலம் காளை உரிமையாளர்கள் காளைகளின் புகைப்படம், உரிமையாளர்கள் ஆதார் எண், அலைபேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும், அதன்படி டோக்கன் வழங்கப்படும், பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லுார் உள்ளிட்ட போட்டிகளில் காளைகள் வளர்ப்பவர்களுக்கு டோக்கன் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. திருப்புவனம் புதுார் காளை உரிமையாளர் பிரவின்குமார் கூறியதாவது: ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. போட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கு தினசரி 300 ரூபாய் வரை செலவாகும். போட்டிகள் நடைபெறும் காலங்களில் ஒரு காளைக்கு பயிற்சி அளிக்க ஐந்து பேர் வரை தேவைப்படும். காளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வருடம் முழுவதும் காளை வளர்ப்பில் ஈடுபாடு காட்டி போட்டிக்கு அழைத்துச் சென்றால் டோக்கன் கிடைப்பதில்லை. அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கே டோக்கன் கிடைத்து வருகிறது. முன்பு வாடி வாசலுக்கு யார் முதலில் அழைத்து வருகிறார்களோ அவர்களது காளைகள் பங்கேற்கும். இதில் வரிசையில் நின்று காளைகளை அவிழ்த்து விடுவோம். காளைகள் போட்டிகளில் வெற்றி பெற்றால் எங்களுக்கு கவுரவம். சொந்த மாவட்டங்களிலாவது எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.