உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குன்றக்குடி யானை தீ விபத்தில் உயிரிழப்பு நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்

குன்றக்குடி யானை தீ விபத்தில் உயிரிழப்பு நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்

காரைக்குடி:குன்றக்குடி கோயில் யானை தீ விபத்தில் உயிரிழந்த நிலையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலுக்கு செப்., 1971 ல் ஆத்தங்குடி உபயதாரர் ஒருவர் மூலம் பெண் யானை சுப்புலட்சுமி வழங்கப்பட்டது. கடந்த 54 ஆண்டுகளாக கோயில் விழாக்கள் உட்பட பல்வேறு கோயில் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. செப்.12 இரவு, யானை மண்டபத்தில் திடீரென்று பிடித்த தீயால் யானை படுகாயம் அடைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்தது. இந்நிலையில் மாவட்ட எஸ்.பி., மற்றும் குன்றக்குடி போலீஸ் ஸ்டேஷனில், யானையின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ஜ., மாநில இளைஞரணி துணைத் தலைவர் பாண்டித்துரை புகார் அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:மின்கசிவால் விபத்து ஏற்பட்டதா அல்லது ஏதேனும் சதி வேலை உள்ளதா என்பதை போலீசார் விசாரித்த பிறகே முடிவு தெரிய வரும். அதற்கு ஆதினம் வாய்ப்பளிக்கவில்லை. யானைக்கு இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காகவே நடந்த குற்றத்தை மூடி மறைக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. வனத்துறையினர் யானை மண்டபத்தில் இருந்த தென்னை ஓலையை அகற்ற ஆலோசனை வழங்கினரா இல்லையா என்று தெரியவில்லை. யானையின் இறப்புக்கு நிர்வாக சீர்கேடும், வனத்துறையின் அலட்சியமுமே காரணம். உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.குன்றக்குடி இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கூறுகையில் ''யானை இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி புகார் மனு வந்துள்ளது. குன்றக்குடி கோயில் நிர்வாகம் சார்பிலும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ