வயல்களில் கருவேல மரங்கள் அகற்ற முடியாமல் கவலை
சிங்கம்புணரி: ; சிங்கம்புணரியில் பாசன வயல்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ள நிலையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து சாகுபடி எதுவும் நடைபெறாமல் தரிசாக போடப்பட்டுள்ளது. அவற்றில் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. சில ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை துவக்க விரும்புகின்றனர். ஆனால் கருவேல மரங்கள் பெரிய அளவில் புதர்களாக மண்டி இருப்பதால் அவற்றை அகற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். வேளாண் துறை சார்பில் இம்மரங்களை அகற்ற மானியம் வழங்கப்பட்டாலும், அவை அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே வேளாண் அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உதவ வேண்டும்.