சிங்கம்புணரியில் மதமாற்ற பிரசங்கம் ஹிந்து அமைப்பினர் முற்றுகையால் நிறுத்தம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மேலுார் ரோடு ஆயில் மில் வளாகத்தில் டிச.14 இரவு மதமாற்ற பிரசங்கம் நடப்பதாக ஹிந்து அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்பட சிலர் அந்த வளாகத்தை முற்றுகையிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் தயாளன் அங்கிருந்த ஹிந்து அமைப்பினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரசங்கத்திற்கு வந்திருந்த பாதிரியார்கள், பொது மக்களை வெளியேற்றினார். முறையான அனுமதி பெறாததால் நிகழ்ச்சிக்கு தடை விதித்தார். இதைத்தொடர்ந்து ஆயில் மில் உரிமையாளர்கள் மீது ஹிந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தங்கபாண்டியன் கூறியதாவது: நிகழ்ச்சி நடந்த ஆயில் மில் உரிமையாளர் ஹிந்துவாக இருந்து மதம் மாறியவர். அங்கு வேலை செய்வோரையும், எண்ணெய் வாங்க வருவோரையும் ஆசை வார்த்தை கூறி மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஆலை வளாகத்தில் அனுமதி இன்றி மதப்பிரசங்கம் நடத்துகின்றனர்.