பட்டாசு ஆலைக்கு சீல்
மானாமதுரை: மானாமதுரை அருகே வாடி வில்லிபுத்துார் கிராமத்தில் கோழிப்பண்ணைக்குள் மறைமுகமாக, சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விருதுநகர் மாவட்ட எல்லை ஓரத்தில் உள்ள வாடி வில்லிபுத்துார் கிராமத்தில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தில் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது.இதில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாகவும், மறைமுகமாகவும் பட்டாசு ஆலை செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.நேற்று மதியம் 2:00 மணிக்கு மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், துணை தாசில்தார் சரவணகுமார் டி.எஸ்.பி., நிரேஷ், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்திய போது எவ்வித அனுமதியுமின்றி மறைமுகமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்ததை தொடர்ந்து அங்கிருந்த பேன்சி ரக பட்டாசுகளையும்,வெடி மருந்து பொருட்களையும் பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர். மேலும் பட்டாசு ஆலையை நடத்தியவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.