கண்காணிப்பு இல்லாததால் சிவகங்கையில் அதிகரிக்கும் குற்றங்கள்
சிவகங்கை: சிவகங்கை நகரில் குற்றங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை நகரில் தொடர் டூவீலர் திருட்டு, கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் நடந்துவருகிறது. இவற்றை தடுப்பதற்கு போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனாலும் வாரத்திற்கு இரண்டு மூன்று டூவீலர் திருடப்படுகிறது.சிவகங்கை நகருக்குள் யார் வருகிறார்கள் யார் செல்கிறார்கள் என்று முழுமையாக கண்காணிக்க நகரின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி., கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும். சிவகங்கை சுற்றுச்சாலையில் தஞ்சாவூர் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்பட்டி விலக்கு, மேலுார் ரோடு காமராஜர் காலனி சந்திப்பு, சாமியார் பட்டி விலக்கு வாணியங்குடி சந்திப்பு, அரண்மனை வாசல்,கோர்ட் வாசல், பஸ் ஸ்டாண்ட் மேம்பால இறக்கம் பஸ் டெப்போ , சிவன் கோயில் சந்திப்பு, மரக்கடை வீதி சந்திப்பு, மஜித் ரோடு சந்திப்பு, நேரு பஜார் சந்திப்பு, அம்பேத்கர் சிலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் அதிவேகமாக வாகனங்கள் செல்பவர்களையும் கண்காணிக்க வேண்டும்.சிவகங்கை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பகுதிகளையும் சிசிடிவி கேமராவால் கண்காணிக்க வேண்டும். இதைத் தவிர நகரில் மீனாட்சி நகர், வ.உ.சி., தெரு, நேரு பஜார்,காளவாசல், போஸ் ரோடு, அரசு மருத்துவ கல்லுாரி வளாகம், ரோஸ் நகர், ஆவரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். போலீசார் கூறுகையில், சிவகங்கை நகரில் அரண்மனை வாசல், பஸ் ஸ்டாண்ட், மதுரை முக்கு, கோர்ட் வாசல் உள்ளிட்ட பகுதியில் சி.சி.டி.வி., கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நகரில் 50 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏற்படுகிறது. தன்னார்வலர்கள், ஸ்பான்சர்ஸ் யாராவது உதவினால் உதவியாக இருக்கும். அதேபோல் வணிக நிறுவனங்கள் அனைவரும் தங்களது வணிக நிறுவனங்களுக்கு முன் கட்டாயம் சி.சி.டி.வி., கேமரா பொறுத்த வேண்டும் என்றனர்.