தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் மறுப்பு: புதிய விவசாயிகளுக்கு கடன் தொகை குறைவு
கூட்டுறவு துறையின் கீழ் மாவட்டத்தில் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளுக்கு நெல், வாழை, கடலை, தென்னை உள்ளிட்டவற்றிற்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. 2024 ஏப்., முதல் 2025 மார்ச் வரை தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.200 கோடி வரை பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இது தவிர விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றிற்கும் கடன் வழங்கப்படுகிறது.ஏற்கனவே பயிர் கடன் பெற்ற விவசாயிகள் சிலர் தாங்கள் பெற்ற கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தவில்லை. கடன் நிலுவை பல கோடி ரூபாய் வரை உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் 1.95 லட்சம் விவசாயிகள் நெற்பயிர் மற்றும் வாழை, நிலக்கடலை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களை நடவு செய்துள்ளனர்.இந்த ஆண்டு நெல் நடவு செய்த விவசாயிகள் பயிர்கடன் பெற தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களை நாடி வருகின்றனர்.இதுவரை சங்கங்களில் கடன் பெறாத விவசாயிகளும் தற்போது புதிதாக கடன் பெற முயற்சிக்கின்றனர். ஆனால், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பழைய உறுப்பினர்களில் கடன் நிலுவை இல்லாதவர்களுக்கு மட்டுமே பயிர் கடன் வழங்கப்படுகிறது. மேலும் புதிதாக பயிர்கடன் கேட்டு வருவோருக்கு குறைந்த தொகையை மட்டுமே தருகின்றனர். அதிகபட்சம் ரூ.20,000 கடன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் எம்.ராமலிங்கம் கூறியதாவது: நல்ல மழையால் விவசாயிகள் அதிகளவில் நெல் நடவு செய்துள்ளனர். தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற முயற்சிக்கின்றனர். ஆனால், கடன் நிலுவை இல்லாத பழைய உறுப்பினர்களுக்கு மட்டுமே ஏக்கருக்கு ரூ.31,000 வீதம் பயிர்கடன் வழங்குகின்றனர். கடன் நிலுவை வைத்துள்ளோருக்கு பழைய கடனை அடைத்தால் தருகின்றனர். புதிதாக பயிர் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு எத்தனை ஏக்கர் இருந்தாலும், அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் தான் தருகின்றனர், என்றார். பயிர்கடனுக்கு கூடுதல் ஒதுக்கீடு
கூட்டுறவு துறை அதிகாரி கூறியதாவது: இந்த ஆண்டிற்கு பயிர்கடன் ரூ.200 கோடி இலக்கு நிர்ணயித்து, ரூ.145 கோடி வரை வழங்கியுள்ளோம். இன்னும் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் நோக்கில், கூடுதல் தொகையை ஒதுக்குமாறு அரசிடம், கலெக்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளோம், என்றார்.