அரசுப்பள்ளியில் ஆபத்தான ஓட்டு கட்டடம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஓட்டுக்கட்டடம் பழுதால் மாணவர்களுக்கு இட நெருக்கடியில் பாடம் கற்பிக்கப்படுகிறது.இவ்வொன்றியத்தில் வையாபுரிபட்டி ஊராட்சி சிறுமருதுார் அரசு நடுநிலைப்பள்ளியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு கட்டடம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் பூட்டப்பட்டு அருகே பழைய கான்கிரீட் கட்டடத்தில் வகுப்பு நடக்கிறது. இப்பள்ளிக்கு ஹைடெக் லேப் வழங்கப்பட்டு கம்ப்யூட்டர்களும் இதே கட்டடத்தில் தான் வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.இதனால் மாணவர்கள் நெருக்கடியில் தவிக்கின்றனர். ஓட்டு கட்டடத்தை இடித்து விட்டு மூன்று வகுப்பறை கொண்ட புதிய கட்டடம் கட்டித் தர பெற்றோர்கள் பலமுறை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்றுவரை ஓட்டு கட்டடம் இடிக்கப்படவில்லை. இதனால் புதிய கட்டடம் வர தாமதம் ஆகிறது. இதனால் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இட நெருக்கடியில் அருகருகே அமர்ந்து பாடங்களை படிக்க வேண்டியுள்ளது. எனவே பழைய ஓட்டு கட்டடத்தை இடித்துவிட்டு மூன்று வகுப்பறை கொண்ட புதிய கட்டடம் கட்ட பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.