திருப்புவனத்தில் விதிகளை மீறி ஆபத்தான பயணம் தொடர்கிறது
திருப்புவனம்: மாவட்டம் முழுவதும் டூவீலர் மற்றும் சரக்கு வாகனங்களில் பலரும் விதிகளை மீறி பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துக்கள் நேரிட்டு வருகின்றன. பத்து வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த அளவிலேயே டூவீலர்கள் இருந்தது. தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் டூவீலர்கள் இல்லாத வீடுகளே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று முதல் அதிகபட்சமாக நான்கு டூவீலர்கள் வரை வைத்துள்ளனர். போக்குவரத்து வசதி தேவையான நேரத்தில் இல்லாததால் அனைத்து தேவைகளுக்கும் டூவீலர்களை நம்பி உள்ளனர். திருப்புவனம் நகரில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டூவீலர்கள் வரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்கேற்ற சாலை வசதி இல்லாத நிலையில் டூவீலர்களில் பலரும் அளவிற்கு அதிக மான நபர்கள் பயணம் செய்கின்றனர். சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்வது, டூவீலரில் தண்ணீர் கேன்களை அதிக அளவில் விபத்து ஏற்படும் வகையில் கொண்டு செல்வது, பள்ளி சிறு வர்கள் டூவீலர் ஓட்டுவது, அலைபேசிக் கொண்டே டூவீலர் ஓட்டுவது, டூவீலர்களில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்ற நிலையில் போலீசாரே சீருடையில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, டூவீலர்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், ஆனால் ஐந்து பேர் வரை ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற விதி மீறல்கள் தொடர்கிறது. டூவீலரில் அசுர வேகத்தில் செல்வது, அளவிற்கு அதிகமானோர் பயணம் செய்வது, சுமைகளை அதிகமாக ஏற்றி செல்வது என தொடர்ச்சியாக விதிகளை மீறி இயக்கப்படுகின்றன. எனவே இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.