சிங்கம்புணரியில் பட்டா இருந்தும் 5 ஆண்டாக வீடுகள் இல்லாமல் தவிப்பு
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே எம்.வலையபட்டியில் வீட்டு மனை பட்டா இருந்தும் குடியிருக்க வீடு இன்றி 5 ஆண்டுகளாக தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனு அளித்தனர். சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலபட்டியில் கலைக்கூத்தாடிகள் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுக்கு முன் இவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. வீட்டு மனை பட்டா பெற்ற குடும்பத்தினர் தங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் தற்காலிக கூரை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அம்மன்நகரில் 25 வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டிருந்தாலும், இதில், 10 பேர் மட்டுமே அரசின் கனவு இல்லம் திட்டத்தில் தேர்வு செய்து வீட்டினை கட்டி வருகின்றனர். எஞ்சிய 15 குடும்பங்களுக்கு இது வரை வீடுகள் வழங்கப்படவில்லை. இதனால் 15 குடும்பத்தினர் தங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் அரசின் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனு அளித்தனர்.