உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சுற்றுலா பயணிகள் வருகை கணக்கிடுவதில் சிக்கல் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

 சுற்றுலா பயணிகள் வருகை கணக்கிடுவதில் சிக்கல் வளர்ச்சி பணிகள் பாதிப்பு

காரைக்குடி: செட்டிநாடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க முடியாததால் சுற்றுலா துறையை மேம்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது, பாரம்பரிய நகரமான காரைக்குடி செட்டிநாடு தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக விளங்கி வருகிறது. செட்டிநாட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீண்ட அகலமான தெருக்கள், பெரிய அரண்மனை, பிரமிக்க வைக்கும் கலையம்சம் கொண்ட பங்களாக்கள், கோயில்கள், நீர் மேலாண்மையுடன் கூடிய தெருக்கள், தெப்பங்கள் என பார்ப்போரை வியக்க வைக்கும் பகுதியாக செட்டிநாடு விளங்கி வருகிறது. கடந்த சில வருடங்களாக, சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளது. இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில், சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, கீழடி, பிரான்மலை மற்றும் கானாடுகாத்தான் பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். கானாடுகாத்தான் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் 12 வளர்ச்சி திட்ட பணிகள் என மொத்தம் ரூ. 798 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், தனியார் துறை முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பாரம்பரிய நகரமான கானாடுகாத்தான் கொத்தமங்கலம் பள்ளத்துார் கோட்டையூர் புதுவயல் காரைக்குடி பகுதிகளில் சுற்றுலா தொழில் செய்ய விரும்புவர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. செட்டிநாட்டில் கட்டட கலைகளை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் இவை தனியாருக்கு சொந்தமானதாகவே உள்ளது. தவிர தங்கும் விடுதிகளும் தனியாருக்கு சொந்தமானதாகவே உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கண்டறிவதில் சிக்கல் நிலவுகிறது. சுற்றுலா துறையை மேம்படுத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை அறிந்தால் மட்டுமே கூடுதல் நிதி ஒதுக்கவோ திட்ட பணிகளை நிறைவேற்ற முடியும். சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில்: சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக செட்டிநாடு,பிரான்மலை, கீழடி ஆகிய பகுதிகள் உள்ளன. பிரான் மலையில் சுற்றுலா பயணிகளுக்காக கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளது. கானாடுகாத்தான் பகுதியில் குளங்களை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. செட்டிநாடு பகுதியில் தனியார் துறை முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், தொழில் செய்ய விரும்புவர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு 7 பேர் விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்களது தகவல் சுற்றுலா துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு உயர் அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு தொடர் பணிகள் மேற்கொள்ளப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ