உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் தொடர் மழையால் குடியிருப்பை சூழ்ந்தது தண்ணீர் நகராட்சி மெத்தனம்: மக்கள் புகார்

சிவகங்கையில் தொடர் மழையால் குடியிருப்பை சூழ்ந்தது தண்ணீர் நகராட்சி மெத்தனம்: மக்கள் புகார்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள சிற்றாறுகளில் மழை வெள்ளம் ஓடிசாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை நகரில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து விஷபூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாலும், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக இரவு பகலாக சாரல் மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் உப்பாறு,மணிமுத்தாறில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. உப்பாற்றில் ஓடும் நீரால் பெரியகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் கிராமத்திற்குள் புகுந்துள்ளது.சிவகங்கை நகர் பகுதியில் மீனாட்சி நகர், ராமசாமி நகர், தென்றல் நகர், சி.பி.,காலனி 4,5,6 வது தெருக்கள், மேம்பாலம் இறக்கம் வல்லபாய் தெரு, மேலவாணியங்குடியில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இந்த பகுதி மக்கள் நகராட்சியில் பல முறை புகார் அளித்து அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.7 வது வார்டு கவுன்சிலர் காந்தி கூறுகையில், 7 வது வார்டு நகரின் விரிவாக்கப்பகுதி. இந்த பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களின் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. அவசரத்திற்கு மக்கள் வெளியே செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் தொல்லை இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறிவிட்டேன். நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.வல்லபாய் தெரு மக்கள் கூறுகையில், வல்லபாய் தெரு பகுதியில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பலமுறை நகராட்சியில் புகார் அளித்துவிட்டோம் கண்டு கொள்ளவில்லை.மாவட்ட நிர்வாகம் தான் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
டிச 16, 2024 09:45

சிவகங்கை மாவட்டத்தில் தற்போதுதான் அதீத மழை பெய்துள்ளது. ஒரே ஒரு கேள்வி மக்களுக்கு. ரியல் எஸ்டேட் காரர்கள் தண்ணீர் வழித்தடத்தை ஆக்ரிமித்தபோது உங்களக்கு தெரியாமல் நடந்ததா? அன்று கண்ணை மூடிக்கொண்டு இன்று கதறுவது நல்லாயில்லை. தண்ணீர் வழித்தடத்தை அடைத்தவர்களை என்ன செய்ய முடியும் என இருக்கிறார்கள். எனவே தண்ணீர் வழி பாதையை நீங்களே சரிசெய்யுங்கள்.


சமீபத்திய செய்தி