சிவகங்கையில் கால்வாய் மீது கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு
சிவகங்கை: சிவகங்கை நகரில் ரோட்டின் இருபுறத்திலும் செல்லும் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு ரோட்டின் அளவு சுருங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.நகரில் நிலைவும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். சிவகங்கை நகரில் அரண்மனை அருகில்,நேருபஜார்,காந்தி வீதி,மஜித்ரோடு,போஸ் ரோடு, தொண்டி சாலை,திருப்புத்துார் ரோடு,மரக்கடை பகுதி,அரண்மனை பின்பகுதியில் வணிக வளாகங்கள்,கடைகள் உள்ளன. இந்த பகுதிகளில் ரோட்டின் இருபுறமும் மழை,கழிவுநீர் செல்ல கால்வாய் செல்கிறது.பாதாள சாக்கடை நகராட்சி சார்பில் இணைப்பு கொடுக்கப்பட்டதாலும் பலர் இணைப்பு பெறாமல் கால்வாய்களில் கழிவுநீரை விடுகின்றனர். இந்த கால்வாயையும் ஆக்கிரமித்து அதன் மீது சிலர் கடைகளை அமைத்துள்ளதால் கால்வாய் இருக்கும் இடமே தெரியாமல் போய்விடுகிறது. இதே நிலை தான் நகரின் பெரும்பாலான பகுதியில் நிலவுகிறது.கால்வாய்களில் அடைப்பு ஏற்படும்போது அவற்றை அகற்ற துாய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் கால்வாய்களை ஆக்கிரமித்து அமைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.