ஆங்கிலேயர் காலத்து ஸ்டேஷனை சீரமைக்க எதிர்பார்ப்பு: மேம்பாட்டு பணி நடைபெறுமா என பயணிகள்
மதுரை ரயில்வே கோட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே ஸ்டேஷனாக மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் விளங்கி வருகிறது. ஆங்கிலேயர் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்ட மிகப் பழமையான இந்த ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விருதுநகர், ராமேஸ்வரம், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களின் வழியாக ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வழியாக 45க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகின்றன. இது தவிர ஏராளமான சரக்கு ரயில் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. இங்கு பயணிகள் ரயில் செல்ல 5 பிளாட்பாரம்,சரக்கு ரயில் போக்குவரத்துக்காக 4க்கும் மேற்பட்ட பிளாட்பாரம் உள்ளன.முக்கியத்துவம் வாய்ந்த இந்த மிகப் பழமையான ரயில்வே ஸ்டேஷனில் போதுமான மேம்பாட்டு பணிகள் நடைபெறவில்லை.ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஓட்டு கட்டடங்களிலேயே அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. பிளாட்பாரங்களில் போதுமான கூரை வசதி இல்லாத காரணத்தினால் வெயில், மழை காலங்களில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பயணிகள் தங்குவதற்கான அறைகள், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனின் முகப்பு பகுதியை மாற்ற கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஸ்டேஷனுக்கு எதிர்புறம் இருந்த குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டது. ஆனால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தில் மிக சிறிய ரயில்வே ஸ்டேஷன்களில் கூட பல கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த மிகப் பழமையான ரயில்வே ஜங்ஷனான மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதி கூட நிறைவேற்றப்படாமல் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ரயில்வே பயணி கிருஷ்ணன் கூறியதாவது: ஆங்கிலேயர் காலத்தில் துவங்கப்பட்ட கட்டடங்களிலேயே தற்போதும் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. பிளாட்பாரங்களில் டிஜிட்டல் போர்டு இல்லாத காரணத்தினால் ரயில்கள் வரும்போது தங்களுக்குரிய பெட்டியை தேடி கண்டுபிடிப்பதற்குள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். ஒரு சில நாட்களில் ரயில்கள் தாமதமாக வரும் போது பயணிகள் தங்குவதற்கு போதுமான காத்திருப்பு அறைகள் இல்லாத காரணத்தினால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறோம். தென்னக ரயில்வே நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் உடனடியாக துவங்கி ரயில்வே ஸ்டேஷன் முகப்பை மதுரை, ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.