திருப்புவனத்தில் வேளாண்மை இயந்திரங்களின்றி விவசாயிகள் தவிப்பு
திருப்புவனம் : திருப்புவனத்தில் விவசாயத்திற்கு தேவையான அரசு வேளாண் இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.வைகை ஆற்றின் வலது, இடது பிரதான கால்வாய் மூலம் திருப்புவனம் வட்டார விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். கானுார், மாரநாடு, திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட கண்மாய்களில் ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழையின் போதும் வைகை ஆற்றில் நீர் திறப்பின் போதும் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கப்படுகிறது . திருப்புவனம் வட்டாரத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை, கத்தரி, வெண்டை சாகுபடி செய்கின்றனர். விவசாயத்திற்கு தேவையான பவர் டில்லர், டிராக்டர், ஸ்பிரேயர், களைவெட்டி, மண்வெட்டி மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட பாசனத்திற்கு குழாய் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும். ஆனால் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக திருப்புவனம் வட்டாரத்தில் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மூலம் எவ்வித வாகனங்களும் குறைந்த வாடகைக்கு கிடைப்பதே இல்லை.வேளாண்மை பொறியியல் துறை மூலம் விண்ணப்பித்த விவசாயிகளுக்கும் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் கூடுதல் வாடகை கொடுத்து தனியார் வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் செயின் வண்டிகள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.3,000 முதல் ரூ.3,200 வரை வாடகை வசூலிக்கின்றனர்.ஏற்கனவே நெல் விவசாயத்தில் ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் அறுவடைக்கும் கூடுதல் செலவு ஏற்படுவதால் விவசாயிகள் தவிக்கின்றனர்.இது குறித்து மணல்மேடு விவசாயி ராஜா கூறியதாவது: மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில் ஒரே ஒரு அறுவடை இயந்திரம், டோசர், டிராக்டர் மட்டுமே உள்ளது. இதனால், தனியாரிடம் கூடுதல் வாடகை கொடுத்து எடுக்க வேண்டிய நிலை உள்ளது. வேளாண்மை பொறியியல் துறையில் சொட்டு நீர் பாசனத்திற்காக தரும் குழாய்கள் தரமற்று இருக்கிறது என்றார்.