உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெற்பயிரை சேதப்படுத்தும் பறவைகள் தவிக்கும் விவசாயிகள்

நெற்பயிரை சேதப்படுத்தும் பறவைகள் தவிக்கும் விவசாயிகள்

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் நடவு செய்யப்பட்ட வயல்களில் கூட்டம் கூட்டமாக வலம் வரும் பறவைகள் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம், பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி 10 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு பணி நடைபெறும். வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் தற்போது நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதி என்பதால் நாற்றங்கால் அமைத்து நாற்று வளர்த்து அதன்பின் 30 முதல் 45 நாட்கள் கழித்து அதனை பறித்து வயல்களில் நடவு செய்வார்கள்.நடவு செய்வதற்கு வசதியாக வயல்களில் உழவு பணி மேற்கொண்டு தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுபோன்ற காலங்களில் வயல்களில் பூச்சிகள், புழுக்கள், நண்டு, சிறு மீன்கள் உள்ளிட்ட ஏராளமானவைகள் வலம் வரும் இவற்றை உண்பதற்காக நீர்க்காகம், கானங்குருவி, செங்கால் நாரை, நாரை, கொக்கு உள்ளிட்ட பறவை இனங்கள் வரும்.பொதுவாக வயல்களில் 10 முதல் 20 பறவைகள் வரை கூட்டமாக வந்து இரை தேடும், இந்தாண்டு கருப்பு நாரை என அழைக்கப்படும் பறவைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை கூட்டம் கூட்டமாக வந்து நெல் வயல்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நடவு செய்த நாற்றுகளை அப்படியே வயல்களில் மண்ணிற்குள் அழுத்தி விடுவதல் நாற்றுகள் வளர்ச்சியின்றி அழுகி விடுகிறது. கருப்பு காக்கைகளை கண்டவுடன் மற்ற வெள்ளை கொக்கு போன்ற பறவைகள் பறந்தோடி விடுகின்றன. வயல்களில் வரப்பு வெட்டி, உழவு பணிகள் மேற்கொண்டு நாற்றங்கால் அமைத்து பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் நாற்றுகளை பறவைகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் திகைத்து வருகின்றனர். இந்த பறவைகளை பிடிக்கவும் முடியவில்லை.விவசாயி பிச்சை கூறுகையில் : இந்தாண்டு தான் இந்த பறவைகள் வந்துள்ளன. இவை வழக்கமாக இருக்கும் கடற்கரை பகுதிகளில் போதிய இரை கிடைக்காததால் இங்கு வந்துள்ளன. வயல்களில் 24 மணி நேரமும் ஆட்கள் இருந்தால் பறவைகள் வராது, ஒரு பக்கம் விரட்டி விட்டால் கண்மாய்க்கு சென்று மீண்டும் வந்து விடுகின்றன, என்றார்.இளங்கோவன் கூறுகையில் : திருப்பாச்சேத்தி, செம்பராயனேந்தல், மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. கருப்பு நாரை எனப்படும் இந்த பறவைகள் வயல்களில் நாசத்தை ஏற்படுத்துகின்றன.இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை