நகைகளை மீட்க முடியாமல் விவசாயிகள்; புதிய அதிகாரி நியமிக்கப்படாததால் அவதி
திருப்புவனம் : திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அலுவலர் நியமனம் செய்யப்படாததால் தங்க நகைகள் அடமானம் வைக்கவும் நகைகளை மீட்கவும் முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மொத்தம் 13 கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. வங்கிகளில் விவசாயிகள் பலரும் விவசாய தேவைகளுக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுவது வழக்கம். மற்ற வங்கிகளை காட்டிலும் வட்டி விகிதம் குறைவு, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற ஆர்வம் காட்டுவார்கள். கடந்தாண்டு செப்டம்பரில் வடகிழக்கு பருவமழையை நம்பி தொடங்கிய விவசாய பணிகளுக்காக தங்க நகையை அடமானம் வைத்த விவசாயிகள் அறுவடை முடிந்து நெல்லை விற்பனை செய்த பின் தங்க நகைகளை மீட்க சென்றால் அலுவலர் மாறுதலில் சென்று விட்டார். புதிய அலுவலர் நியமிக்கப்படவில்லை என கடந்த 15 நாட்களாக அலைக்கழிக்கின்றனர். கையில் பணம் இருக்கும் போதே அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியும், பணம் சிறிது சிறிதாக செலவாகி வரும் நிலையில் அதிகாரிகள் இல்லை என்பதால் தங்க நகைகளை மீட்க முடியவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். அதிகாரிகள் கூறுகையில், திருப்புவனம் வட்டாரத்தில் 13 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதில் 10 வங்கிகளில் செயலாளர், காசாளர் இருவரிடம் தலா ஒரு சாவி இருக்கும். நகை அடமானம், மீட்பு இருவருமே முடிவெடுக்கலாம், பழையனூர், மேலராங்கியம், பிரமனூர் ஆகிய மூன்று வங்கிகளுக்கும் மேற்பார்வையாளர் இருந்தால் மட்டுமே நகை அடமானம், மீட்பு பணிகள், கடன் வழங்கும் பணி நடைபெறும். ஏற்கனவே இருந்தவர் பணி மாறுதலில் சென்று விட்டார். புதியவர் இன்னும் ஒரு வாரத்தில் நியமிக்கப்படுவார், என்றனர்.