சாலைப் பணியால் மூடப்பட்ட மடைகள் விவசாயம் பாதிப்பு
காரைக்குடி : கல்லல் அருகேயுள்ள பாடத்தான்பட்டியில் சாலைப் பணி காரணமாக மூடப்பட்ட மடைகளால் விவசாயம் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கல்லல் ஊராட்சி ஒன்றியம், பொய்யலுார் ஊராட்சிக்குட்பட்ட பாடத்தான்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பாடத்தான்பட்டி கண்மாய் மூலம் 100 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடைபெற்ற வந்தது. இக்கண்மாயில் இருந்து வயல்களுக்கு செல்ல மடைகள் அமைக்கப்பட்டிருந்தது. கண்மாய் அருகிலேயே ரயில்வே கேட் உள்ளது. இப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடந்தது. சாலை பணியின் போது மடைகள் பராமரிக்கப்படாமல் முற்றிலுமாக கண்மாய் மடை அடைபட்டது. விவசாயிகள் கண்மாய் நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயப் பணியையும் கைவிட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயத்தை காக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.