காரைக்குடி மினி ஸ்டேடியத்தில் நடை பயிற்சிக்கு கட்டணம் வசூல்
காரைக்குடி; காரைக்குடி மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள தனித்தனி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி., யுடன் மாதத்திற்கு ரூ.50 கட்டணம் வசூல் செய்யப்படுவதால் நடை பயிற்சி மேற்கொள்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரைக்குடி என்.ஜி.ஓ., காலனியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 9 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி செலவில் மினி ஸ்டேடியம் கட்டப்பட்டது. ஓடுதளம், வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, உடற்பயிற்சி கூடம், பார்வையாளர் அமரும் கேலரி, பொருட்கள் வைப்பறை, அலுவலக அறை உட்பட பல்வேறு வசதிகளுடன் ஸ்டேடியம் அமைக்கப்பட்டது. இந்த விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்சி பெற ஒவ்வொரு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு தொகை வசூல் செய்யப்படு கிறது. மத்திய, மாநில அரசு நிறுவனங்களுக்கு ஒரு தொகை, அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஒரு தொகை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு தொகை, மாவட்ட கழகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு தொகை என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், மினி ஸ்டேடியத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியுடன் ரூ.50 வசூல் செய்வதால் நடை பயிற்சி மேற்கொள்வோர் மத்தியில் அதிருப்தி எழுந் துள்ளது.