நோயாளிகளிடம் டாக்டர்களுக்கு நல்ல அணுகுமுறை அவசியம் மதுரை முன்னாள் டீன் பேச்சு
சிவகங்கை: டாக்டர்கள், நோயாளிகளிடம் நல்ல அணுகுமுறையுடன் சிகிச்சை அளிக்க வேண்டும்'', என சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் மதுரை அரசு மருத்துவ கல்லுாரி முன்னாள் டீன் மருதுபாண்டியன் பேசினார்.அவர் பேசியதாவது: எல்லாம் தெரியும் என கூறாமல், நோயாளிகளிடம் கோபப்படாமல், நல்ல முறையில் அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.டாக்டர்கள், எந்தவித விசாரணையும் இன்றி சான்று வழங்க கூடாது. நல்ல வழிமுறைக்கு தங்களது உன்னத பணியை அழைத்து செல்ல வேண்டும்.டாக்டர்களாகிய உங்களை உருவாக்கிய பெற்றோருக்கு மரியாதை செய்யுங்கள். அவர்கள் தான் உங்களது வழிகாட்டி, ஊக்கப்படுத்துபவர், நிதி சார்ந்த விஷயங்களில் உதவி புரிபவர்கள். நோயாளிகளுக்கு டாக்டர்களாகிய உங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் விதத்தில் பணியாற்றுங்கள், என்றார்.பட்டமளிப்பு விழாவிற்கு டீன் சத்தியபாமா தலைமை வகித்தார். மதுரை மருத்துவ கல்லுாரி பொது மருத்துவ துறை தலைவர் (ஓய்வு) நடராஜன் சிறப்பு வகித்தார்.மதுரை மருத்துவ கல்லுாரி துறை தலைவர்கள் பாலமுருகன், காயத்ரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி துணை முதல்வர் விசாலாட்சி வரவேற்றார்.உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது ரபிக், தென்றல் உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.மாணவர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி.சேதுபதி நன்றி கூறினார்.பட்டமளிப்பு விழாவில் 2019 முதல் 2025 வரை படித்த 95 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.இதில், தங்க பதக்கம், பல்கலை தரவரிசை பட்டியலில் 20 மாணவர்கள் பதக்கம், சான்றினை பெற்றனர்.
தங்கம் வென்ற மாணவி உருக்கம்
அதிகளவில் தங்கம் வென்ற மாணவி பி.தேவதர்ஷினி கூறியதாவது: எனது சொந்த ஊர் திருப்பூர். அப்பா பார்த்தசாரதி, அம்மா சுமதி. இக்கல்லுாரியில் அனைத்து துறை பேராசிரியர்களும் மாணவர்களுக்கு எளியமுறையில் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர். அன்றைய பாடத்தை அன்றே படித்துவிடுவேன். மேலும் மனதை ஒருநிலைப்படுத்தி பேராசிரியர்கள் பாடம் எடுக்கும் போது கவனிக்க வேண்டும். அப்போது தான் விடுதியில் பாடத்தை புரிந்து படிக்க முடியும். இந்த நடைமுறையை பின்பற்றி படித்ததால், அதிகளவில் பதக்கம் பெற்றேன், என்றார்.