நான்கு வழிச்சாலை பணியால் விவசாய நிலத்திற்கு வழியில்லை; விவசாயிகள் வேதனை
காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும், மானாவாரி மற்றும் கண்மாய் பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. காரைக்குடி -- மேலுார் நான்கு வழிச்சாலை பணிக்காக இப்பகுதியில், வீடுகள் மற்றும் நிலங்கள், கண்மாய்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை சாலைப்ணியால் மறைந்து போனது. விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயப் பணியே கேள்விக்குறியாகி உள்ளது. விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு பாதை அமைத்துத் தரும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில்: நான்கு வழிச்சாலையால் ஊர் தனியாகவும் விவசாய நிலங்கள் தனியாகவும் பிரிந்து விட்டது. வயல்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் ரோட்டில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டி உள்ளது. விவசாய பொருட்கள் மற்றும் கால்நடைகள், விவசாய வாகனங்கள் கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக தனி பாதை அமைத்து தரும்படி கேட்டிருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.