உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடிக்கடி நிறுத்தப்படும் பஸ் போக்குவரத்து புதுார் மக்கள் சிரமம்

அடிக்கடி நிறுத்தப்படும் பஸ் போக்குவரத்து புதுார் மக்கள் சிரமம்

திருப்புவனம்: திருப்புவனம் புதுார், வன்னிகோட்டை, பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு அடிக்கடி பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பள்ளி கல்லுாரி செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.திருப்புவனம் புதுார், பர்மா காலனி, வன்னிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வேளாண் அலுவலகம், கால்நடை மருந்தகம், முஸ்லிம் பள்ளி, அரசு மாணவியர் விடுதி என ஏராளமானவை செயல்படுகின்றன.பிரமனுார், டி.பறையங்குளம், பனையனேந்தல் செல்லும் அரசு டவுன் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் ஆகியவற்றை நம்பியே இப்பகுதி மக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.இப்பாதையில் ஆறு மாதங்களாக தொடர்ந்து கட்டுமான பணி நடப்பதால் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பள்ளி வாசல் எதிரே சாக்கடை கால்வாயை உயர்த்தி பாலம் கட்டுமான பணிக்காக ஒன்றரை மாதம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் சாலையோரம் குடிநீர் குழாய் பதிக்கும் பணி, அதற்கு பின் சாலையோரம் சாக்கடை வடிகால் கட்டும் பணி என அடுத்தடுத்து பணிகள் மேற்கொண்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.அவசரத்திற்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியவில்லை. நீண்ட துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. பிரமனுார், டி.பறையங்குளம், பனையனேந்தல் டவுன் பஸ்களும் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுவதால் நடந்தே செல்ல வேண்டியுள்ளதாக இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்த பின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை