குறிப்பிடும் இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை கரைப்பு
சிவகங்கை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீர்நிலைகளில் சிலைகளை குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல்படி, களிமண்ணால் செய்த, பிளாஸ்டர் ஆப் பாரீஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருளால் மட்டுமே, செய்த விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளை தயாரிக்க உலர்ந்த மலர், வைக்கோல், இயற்கை பிசின் பயன்படுத்தலாம். சிலைகளுக்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய், வண்ண பூச்சுக்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல், செயற்கை சாயம் கொண்ட வண்ண பூச்சுக்களை பயன்படுத்தக்கூடாது. மாவட்ட அளவில் சிலைகளை சிவகங்கையில் தெப்பக்குளம், மானாமதுரையில் ஆலங்குளம், சாலைக்கிராமம் ஊரணி, காரைக்குடி சிவன்கோயில் ஊரணி, தேவகோட்டையில் சிலம்பணி ஊரணி, சிங்கம்புணரி ஊரணிகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றார்.