உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோஷ்டியூர் கோயிலில் திருப்பணி தங்கத் தகடு ஒட்டும் பணி நவ.14ல் துவக்கம்

திருக்கோஷ்டியூர் கோயிலில் திருப்பணி தங்கத் தகடு ஒட்டும் பணி நவ.14ல் துவக்கம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருப்பணியை முன்னிட்டு விமானத்தில் தங்கத் தகடு ஒட்டும் பணி நவ.14 ல் துவங்குகிறது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அஷ்டாங்க விமானம் புராண,வரலாற்று சிறப்பு மிக்கது. கோயில் விமானங்களில் அரிதான இந்த மூலவர் விமானத்திற்கு தங்கத் தகடு பதிக்க திருப்பணி தேவஸ்தானம் மற்றும் சவுமிய நாராயணன் எம்பெருமானார் சாரிட்டபிள் ட்ரஸ்ட் ஆகியோரால் 18 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. 3448 சதுர அடி பரப்பிலான இந்த விமானத்திற்கு தங்க தகடு வேய சதுர அடிக்கு 22 கிராம் தங்கம் தேவைப்பட்டது. முதற்கட்டமாக விமான சுதை வேலைப்பாடுகளில் செப்புத் தகடு பொருத்துவதற்கான பணி நடைபெற்றது. பின்னர் தங்கம் சேகரிப்புப்பணி தொய்வடைந்தது.இந்நிலையில் 2022ல் மதுரை ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நிறுவனர் டாக்டர் சொக்கலிங்கம் தரப்பினர் 8 கிலோ வரை தங்கம் வழங்கி திருப்பணியை வேகப்படுத்தினர். தொடர்ந்து திருப்பணிக்கு தேவையான தங்கத்தை உபயதாரர்கள், சுற்று வட்டாரக் கிராமத்தினரும் வழங்கத் துவங்கினர்.திருப்பணிக்கான அறநிலையத்துறை துணை ஆணையரும் நியமிக்கப்பட்டார். விமானத்தின் திருப்பணிக்கு மொத்தம் 77 கிலோ தங்கம் தேவைப்பட்டது. திருப்பணி விமானத்தின் முதல்நிலை, மத்திமநிலை,அடித்தட்டு என்று மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டது.தற்போது உபயதாரர்கள் மூலம் 29 கிலோ 813 கிராம் சேர்ந்துள்ளது. சேர்ந்துள்ள தங்கத்தை வைத்து விமானத்தின் தங்கக் கலசத்தின் கீழ் முதல்நிலை திருப்பணி துவங்க உள்ளது. அதற்கான அரசு அனுமதிக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால் தங்க விமானத் திருப்பணி நவ.14ல் காலை 9:30 மணிக்கு மேல் 10:50 மணிக்குள் துவங்க உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பணியை துவக்கி வைக்கிறார். முதல்நிலை திருப்பணி நான்கு மாதங்களுக்குள் நிறைவடையும்.மேலும் அடுத்த இரு நிலைகளுக்கான திருப்பணிக்கு தங்கம் சேகரிப்பு பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை