நடுரோட்டில் பழுதான அரசு பஸ்: பயணிகள் தவிப்பு
காரைக்குடி: காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து எஸ்.பி., பட்டினத்திற்கு சென்ற அரசு பஸ் அமராவதி புதுார் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்றது. காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, எஸ்.பி., பட்டினத்திற்கு தினமும் காலை 8:10 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. வேலைக்குச் செல்வோர், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த பஸ் அடிக்கடி பழுதாவதோடு, தாமதமாக வருவதாக பயணிகள் புகார் கூறினர்.கடந்த வாரம் காலையில் பயணிகள் அனைவரும் பஸ்சில் ஏறி அமர்ந்த நிலையில், பஸ் பழுதாகியுள்ளது வேறு பஸ்சில் செல்லுங்கள் என போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதால் பயணிகள் நீண்ட நேரம் காத்து கிடந்து வேறு பஸ்சில் சென்றனர்.இந்நிலையில் நேற்று காலை பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் எஸ்.பி., பட்டினம் அரசு பஸ், அமராவதி புதுார் அருகே சாலையில் சென்ற போது திடீரென்று பழுதானது. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.பஸ் சரி ஆகாததால் பயணிகள் வேறு பஸ்சில் ஏறிச் சென்றனர். எஸ்.பி., பட்டினம் செல்லும் அரசு பஸ், அடிக்கடி பழுதாவதும் தாமதமாக வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர முடிவு இல்லாததாலும், சரியான நேரத்திற்கு செல்ல முடியாமலும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் கூறினாலும் எதுவும் செய்வதில்லை என்று மக்கள் குமுறுகின்றனர்.