வடக்கு கீரனுாருக்கு வராத அரசு பஸ்கள்
சிவகங்கை: பரமக்குடியில் இருந்து இளையான்குடி வழியாக கிளாஞ்சினி வரை வரும் அரசு பஸ்கள் அனைத்தும்வடக்கு கீரனுாருக்குள் வந்து செல்ல மறுப்பதாககிராமத்தினர் புகார் அளித்தனர். இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் வடக்கு கீரனுாரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு கரும்பு கூட்டம் முதல் வடக்கு கீரனுார் வரை தார்ரோடு வசதியின்றி, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இக்கிராமங்களுக்கு காலை, மாலை இரு நேரங்களில் மட்டுமே அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. மற்ற நேரங்களில் பரமக்குடியில் இருந்து இளையான்குடி வழியாக கிளாஞ்சினி வரை செல்லும் அனைத்து அரசு பஸ்களும், வடக்கு கீரனுாரை தொடர்ந்து புறக்கணிக்கின்றன. இதனால், வடக்கு கீரனுாரில் இருந்து இளையான்குடியில் உள்ள பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்கரும்பு கூட்டம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, 3 கி.மீ., துாரமுள்ள வடக்கு கீரனுாருக்கு நடந்தே செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் பஸ் வசதியின்றி பள்ளி, கல்லுாரி விட்டு வீட்டிற்கு திரும்பும் மாணவ, மாணவிகள் கரும்புகூட்டம் பஸ் ஸ்டாப்பில் இருந்து வடக்குகீரனுாருக்கு கண்மாய் கரையில் உள்ள ரோட்டில் தான் நடந்து வரவேண்டும். எனவே பரமக்குடியில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் வடக்கு கீரனுாருக்கு கண்டிப்பாக வந்து செல்ல வேண்டும் என நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் கிராமத்தினர் புகார் அளித்தனர்.