தனியார் இடத்தில் அரசுத்திட்டங்கள்; பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிப்பு
சிங்கம்புணரி; சிங்கம்புணரி ஒன்றியத்தில் தனியார் இடத்தில் அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதால், அனைத்து மக்களும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இவ்வொன்றியத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களில் தண்ணீர் தொட்டி, கதிரடிக்கும் களம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அவசரமாக இடம் தேர்வு செய்து பணிகளை நிறைவேற்றுகின்றனர். அப்படி செய்யும்போது அரசு புறம்போக்கு இடத்தில் நிறைவேற்றாமல், தனிநபர்களுக்கு சொந்தமான இடத்தில் சில திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. திட்டம் முடிவடைந்த பிறகு இடத்துக்குச் சொந்தக்காரர்கள் திட்ட கட்டுமானங்களை ஆக்கிரமித்துக் கொண்டு மற்றவர்கள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் வருகிறது. இப்பகுதியில் ஏற்கனவே சிறிய குடிநீர் தொட்டிகள் தனிநபர் இடத்தில் அமைக்கப்பட்டு அவர்கள் வேலி போட்டு வைத்திருக்கும் அவலம் இருந்தது. இந்நிலையில் கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ. 9 லட்சம் செலவில் கடந்தாண்டு கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டது. நில உரிமையாளரிடம் முறையான ஆவணங்களை பெற்று பதிவு செய்யாமல், வாய்மொழி உத்தரவாதத்துடன் திட்டம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது அப்பகுதி மக்கள் கதிரடிக்கும் களத்தை பயன்படுத்த செல்லும் போது, நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது. சூரம்பட்டியை சேர்ந்த கருப்பையா தெரிவித்ததாவது; எங்கள் கிராமத்திற்கான கதிரடிக்கும் களத்தை தனிநபர் இடத்தில் அமைக்கும்போதே, பொது இடத்தில் அமையுங்கள் தனிநபர் இடத்தில் அமைத்தால் பிரச்னை வரும் என்று எதிர்ப்பு தெரிவித்தோம். தனியார் இடத்திலேயே களம் அமைக்கப்பட்டது. தற்போது அப்பகுதி மக்கள் பயன்படுத்த செல்லும்போது இடத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது குறித்து அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வருவாய்த்துறை ஆவணங்களில் இன்னும் தனிநபர் பெயரே உள்ளது. அரசு திட்டங்களை தனிநபர் நிலங்களில் நிறைவேற்றும் போது வருங்காலங்களில் மற்ற நபர்கள் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உள்ளது, என்றார். யூனியன் அதிகாரிகளிடம் தெரிவித்த போது, அந்த இடத்தில் திட்டத்தை நிறைவேற்ற ஆட்சேபனை இல்லை என்று எழுதி தந்து இருக்கிறார்கள். விரைவில் நிலத்தை அரசு பெயரில் எழுதி வாங்கி, பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.