பொய்யாவயல் கிராமத்தில் மின்கம்பியால் அறுவடை பாதிப்பு
காரைக்குடி: காரைக்குடி அருகே பொய்யாவயல் கிராமத்தில் மிகவும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. சாக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்யாவயல் ஊராட்சியில் விவசாய பணிகள் முடிந்து நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் வயல் வழியாக தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் மக்கள் விவசாய அறுவடை பணியை மேற்கொள்ள முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சோகம் அடங்காத நிலையில் வயல்களில் தரையோடு தரையாக செல்லும் மின்கம்பிகளால் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் தான் மின்வாரிய அதிகாரிகள் விழிப்பார்களா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.மீண்டும் மின்சாரத்தால் உயிர்பலி ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்