மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் கனமழை திருப்புவனத்தில் 93.60 மி.மீ.,
சிவகங்கை: மாவட்டத்தில் திருப்புவனம், திருப்புத்துார், காரைக்குடி, தேவகோட்டை, காளையார்கோவில் ஆகிய 5 தாலுகாக்களில் கனமழை பெய்துள்ளது. அதிக பட்சமாக திருப்புவனத்தில் 93.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிக மழை பெறும் மாவட்ட பட்டியலில் சிவகங்கையும் இடம் பெற்றுள்ளன.கல்வித்துறை சார்பில் பள்ளியில் பராமரிப்பில்லா கட்டடம் உள்ள பகுதியில் மாணவர்களை அனுமதிக்க கூடாது, உரிய பாதுகாப்புடன் கூடிய மின்சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காத வகையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கண்மாய்களில் பெரும்பாலான கண்மாய்களில் 25 சதவீதம் மழை நீர் கூட சேகரமாகவில்லை. தொடர்ந்து மழை பெய்து, வரத்து கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தால் மட்டுமே, ஓரளவிற்கு கண்மாய்களில் நீர்தேங்கும். இருப்பினும் பருவ மழை காலங்களில் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டால் சமாளிக்க மணல் மூடைகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.பருவ மழை காலங்களில் ஏற்படும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து வருவாய், பொதுப்பணித்துறையினருக்கு பேரிடர் மேலாண்மை துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். 5 தாலுகாக்களில் கனத்த மழை நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி திருப்புவனம் - 93.60 மி.மீ., காரைக்குடி - 90, திருப்புத்துார் - 88, காளையார்கோவில் - 66, தேவகோட்டை ஆகிய 5 தாலுகாக்களில் கன மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக சிவகங்கையில் 59, சிங்கம்புணரியில் 58.20, இளையான்குடியில் 46, மானாமதுரையில் 36.40 மி.மீ., என மற்ற 4 தாலுகாக்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு வீடுகள் சேதம், கால்நடைகள் இறப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.