சிவகங்கையில் கொட்டித்தீர்த்த மழை
சிவகங்கை: சிவகங்கையில் நேற்று மதியம் 2:30 முதல் இரவு வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. மாவட்ட அளவில் பரவலாக மேலடுக்கு சுழற்சி மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையும் பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் ஆர்வமுடன் குளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு சிவகங்கையில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு வரை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால், ரோடுகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.தேவகோட்டை: -தேவகோட்டையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இரவு மட்டும் 32 மி.மீட்டர் மழை பெய்தது. நேற்று மதியம் 3:00 மணி முதல் இரவு வரை மழை விடாமல் தொடர் மழையாக பெய்து வருகிறது. மழையில் மரங்கள் சாய்ந்ததில் மின்கம்பிகள்உரசி டிரான்ஸ்பார்மர் பாதிப்புக்கு உள்ளாகி மின்தடை ஏற்பட்டது. உதவி மின் பொறியாளர் டைடஸ் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் மரங்களை வெட்டி மின்சாரம் சப்ளை வழங்கினர்.திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்தது.வைகை ஆற்று பாசனத்தை நம்பி காலம் பருவத்தில் பயிர் செய்யும் விவசாயிகள் தற்போது நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணி முதல் இடி, மின்னலுடன்பலத்த மழை பெய்ததால்திருப்புவனத்தில் டி.வி.,க்கள், பல்பு, டியூப்லைட் உள்ளிட்டவை சேதமடைந்தன. மழை அளவு(நேற்று காலை நிலவரம்) சிவகங்கை - 29 மி.மீ., திருப்புவனம் - 76.20, திருப்புத்துார் - 32, காரைக்குடி - 58, தேவகோட்டை -31.60, காளையார்கோவில் - 34.20, சிங்கம்புணரி - 32.40 மழை பதிவாகியுள்ளது.