தேவகோட்டையில் கொட்டி தீர்த்தது கனமழை
வடகிழக்கு பருவ மழை அக்., 20 க்கு மேல் தான் துவங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சிவகங்கை மாவட்ட அளவில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேவகோட்டையில் பலத்த மழை பெய்து ரோடுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனை தொடர்ந்து அதிக பட்சமாக நேற்று முன்தினம் காளையார்கோவிலில் மழை பெய்துள்ளது. ஏற்கனவே வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து, புரட்டாசியில் 25 ஆயிரம் எக்டேர் விவசாயிகள் மானாவாரியாக நெல் நடவு செய்துள்ளனர்.இது தவிர மானாவாரியாக நிலக்கடலை, பயறு வகை பயிர்களை நடவு செய்து வைத்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை உரிய நேரத்தில் கை கொடுத்தால், நடவு செய்த பயிர்கள் அனைத்தும் தப்பிவிடும் என்ற எதிர்பார்ப்பில் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் இருந்து வந்தனர். மேலடுக்கு சுழற்சி மழை
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து பகுதியிலும் மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி மழை காரணமாக நேற்று முன்தினம் அதிகபட்சமாக காளையார்கோவிலில் 128.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.இது அப்பகுதியில் மானாவாரியாக நெல், நிலக்கடலை நடவு செய்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று திருப்புத்துாரில் 66, காரைக்குடியில் 63, தேவகோட்டையில் 28.60, சிங்கம்புணரியில் 25.20, மானாமதுரை 12, இளையான்குடி 5, திருப்புவனம் 3.20, சிவகங்கை 2 மி.மீ., வரை பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு காளையார்கோவிலில் ஓட்டு வீடு, மின்கம்பம் ஒன்றும் சேதமானது.தொடர்ந்து மழை பெய்து வருவதால், மானாவாரியாக நெல் நடவு செய்த 25,000 எக்டேர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.