மாநகராட்சி ஒப்பந்தப் பணி தீர்மானம் நிறுத்தி வைப்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : காரைக்குடி மாநகராட்சியில் மேயரின் முன் அனுமதியுடன் ஒப்பந்தப் பணி மேற்கொண்டதற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலர் மெய்யர் தாக்கல் செய்த மனு:மாநகராட்சியில் விதிகளுக்கு முரணாக மேயரின் முன் அனுமதி என்ற பெயரில் பல்வேறு ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றிய பின்புதான் ஒப்பந்தப் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.இன்று (ஜூலை 10) மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதன் விவாத (அஜன்டா) பட்டியலில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன. விதிகள்படி 6 நாட்களுக்கு முன் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதை பின்பற்றவில்லை. மேயரின் முன் அனுமதியுடன் பல வேலைகளுக்கு ஒப்பந்தப் பணி வழங்கிவிட்டு அதற்கு ஒப்புதல் அளிக்க தீர்மானம் நிறைவேற்ற அஜன்டாவில் இடம்பெற்றுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சி.சரவணன், 'ஏற்கனவே ஒப்பந்தப் பணி ஒதுக்கீடு செய்ததற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்,' என இடைக்கால உத்தரவிட்டார்.