பழநி முருகன் மாநாடு செலவு கணக்கை தராத தமிழக அரசு * ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
தேவகோட்டை:''திண்டுக்கல் மாவட்டம் பழநியில் முருகன் மாநாடு அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலின் பணத்திலா நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை நிதியில் தானே நடந்தது. அந்த மாநாட்டின் செலவு கணக்கை தொடர்ந்து கேட்கிறோம். ஆனால் தமிழக அரசு தர தயாரில்லை,'' என, தேவகோட்டையில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டினார்.அவர் கூறியதாவது: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை ஹிந்துக்கள், ஹிந்து இயக்கங்கள் சேர்ந்து நடத்துகிறோம். இந்த மாநாட்டிற்கு கூட்டம் வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல முயற்சிகளை செய்து கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. முருகனின் ஆறுபடை வீடுகளை ஓரிடத்தில் அமைத்து ஆறுபடை வீடுகளில் இருந்து வேல் கொண்டு வந்து பூஜை செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். பின் கோர்ட் உத்தரவை தொடர்ந்து மூன்று நாட்களாக பூஜை நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த மாநாட்டிற்கு கூட்டம் அதிகம் வர வேண்டும் என விரதம் இருந்து வருகிறார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் விரதம் இருக்கிறார். ஆனால் கூட்டம் வரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு விரதம் இருப்பதாக செய்திகள் வருகின்றன. கடவுள் நம்பிக்கையுடன் விரதம் இருக்கிறாரே அதற்காக நன்றி. பவன் கல்யாணுக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் என சேகர்பாபு வேடிக்கையாக இருக்கிறது.இம்மாநாட்டிற்கு எதிராக கம்யூ., கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கருத்து சொல்கிறார்கள். அது நாத்திக கூட்டணி. நக்சலைட் சிந்தனை உள்ள கூட்டணி.ஆனால் இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பவன் கல்யாண், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்கின்றனர் என்றார்.