இளையான்குடி - சிவகங்கை ரோடு விரிவாக்க பணி ரூ.24 கோடியில் நடக்கிறது
சிவகங்கை : ராமநாதபுரம் -- மேலுார் மாநில நெடுஞ்சாலையில் ரூ.24 கோடியில் இளையான்குடி முதல் சிவகங்கை அருகே ஊத்திக்குளம் வரையிலான ரோடு தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.ராமநாதபுரம் - மேலுார் (எஸ்.எச்.,34) மாநில நெடுஞ்சாலையில், அதிகாரிகள் நடத்திய வாகன பரிசோதனையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 7,000 முதல் 10,000 வாகனங்கள் வரை இளையான்குடி ரோட்டில் கடந்து செல்கிறது. சிவகங்கை ஊத்திக்குளம்- இளையான்குடி வரையிலான 24 கி.மீ., நீளத்தில் 7 மீட்டர் அகல ரோட்டை விரிவாக்கம் செய்ய அரசு செயல்பாட்டு அடிப்படை நிதியில் ரூ.24 கோடி ஒதுக்கியது. இந்த நிதியின் மூலம் சிவகங்கை ஊத்திக்குளம் முதல் இளையான்குடி வரை 7 மீட்டர் அகல ரோட்டை 10 மீட்டர் அகலத்திற்கு, கடினமான ரோடாக மாற்றும் பணி நடந்து வருகிறது. 10 மீட்டர் அகல ரோட்டின் இருபுறமும் தலா 1.75 மீட்டர் அகலத்திற்கு தனியாக டூவீலர்கள் செல்ல பாதை ஒதுக்கியுள்ளனர். இந்த ரோட்டில் சென்டர் மீடியன்' இருக்காது. ரோட்டின் மூலம் கனரக வாகனங்களும் எளிதில் கடந்து செல்ல முடியும்.அதிகாரிகள் பரிசோதனை: சிவகங்கை அருகே ஊத்திக்குளத்தில் புதுப்பிக்கப்பட்ட ரோட்டின் தரம் குறித்து மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையில் சிவகங்கை கோட்ட பொறியாளர் சந்திரன், உதவி கோட்ட பொறியாளர்கள் சையது இப்ராகிம், அரிமுகுந்தன் (தரக்கட்டுப்பாடு), உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.