நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் இளையான்குடி, மானாமதுரை விவசாயிகள் எதிர்பார்ப்பு
இளையான்குடி: இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் இயந்திரங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாடகை நிர்ணயிக்க வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இளையான்குடி, மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான எக்டேரில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த பருவமழையின் போது பெய்த மழை நீரை வைத்தும்,வைகை ஆற்றில் 3 மாதங்களாக சென்ற தண்ணீரினால் கண்மாய்களுக்கு வந்த தண்ணீரை வைத்தும் நெல் விவசாயம் செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை கட்டணம் கூடுதலாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இளையான்குடி பகுதி விவசாயிகள் கூறியதாவது: இளையான்குடியில் கடந்த வருடம் நெல் அறுவடை நேரத்தில் டயர் அறுவடை இயந்திரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த 1 மணி நேரத்திற்கு ரூ.1600ம்,செயின் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.2800ம் பெற்று வந்தனர். ஆனால் இந்த வருடம் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் கிராமங்களுக்கு தகுந்தாற் போன்றும், வயல்வெளிகளுக்கு தகுந்தாற் போன்றும், டீசல் விலை உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற காரணங்களை கூறி கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.ஏற்கனவே போதுமான விளைச்சல் இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிற நிலையில் தற்போது அறுவடை இயந்திரங்களுக்கும் கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படுவதால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த வருடத்திற்கு நெல் அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.