குடிநீரில் கலக்கும் அரிசி ஆலைக் கழிவால் பாதிப்பு
காரைக்குடி: புதுவயல் பேரூராட்சியில் அரிசி ஆலை கழிவில்இருந்து வெளியேறும் கழிவு நீர் குடிநீரில் கலப்பதால் மக்கள் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். புதுவயல் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 17வது வார்டு சிங்காரத் தோப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் போர்வெல் அமைக்கப்பட்டு சிங்காரத்தோப்பு காமராஜர்நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள அரிசி ஆலை கழிவு வெளியேற்றப்படுவதால் ஊரணி கால்வாய்களில் ஓடுகிறது. மேலும் குடியிருப்புகளை சுற்றிலும் கழிவுநீர் சூழ்ந்துள்ளதோடு கொசுக்கள் உற்பத்தியாகிறது. போர்வெல்லின் அருகே கழிவு நீர் தேங்கி கிடப்பதால், குடிநீர் கலங்கலாக வருகிறது.உதயகுமார் கூறுகையில், அரிசி ஆலை கழிவு நீர் வெளியேறுவதால் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஊரணி மற்றும் கால்வாய்களில் சாக்கடை தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதுகுறித்து பேரூராட்சி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. குடிநீரில் சாக்கடை கலப்பதால் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சரண்யா கூறுகையில், நடுத்தர மக்கள் வசிக்கும் இப்பகுதியில் அடிப்படை வசதி இல்லை. அரிசி ஆலை கழிவு வீடுகளை சூழ்ந்துள்ளது. குடிநீரில் கழிவு கலந்து, குடத்தில் பிடிக்கும் போது தண்ணீரில் எண்ணெய்யாக மிதக்கிறது. தண்ணீரின் நிறம் மாறி துர்நாற்றம் அடிப்பதால் குடிக்க முடியவில்லை. குழந்தைகளுக்கு பல்வேறு நோய் ஏற்படுகிறது.