திருப்புவனத்தில் ஷேர் ஆட்டோக்களால் பாதிப்பு
திருப்புவனம்: திருப்புவனத்தில் ஷேர் ஆட்டோக்களால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என பல தரப்பட்டவர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மதுரை நகரை ஒட்டி அமைந்துள்ள திருப்புவனம் நகரத்தில் எட்டாயிரம் வீடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பலரும் தங்களது தேவைகளுக்கு தினசரி திருப்புவனம் வழியாக மதுரை சென்று வருகின்றனர். இவர்களது போக்குவரத்து வசதியை டவுன் பஸ்களை விட ஷேர் ஆட்டோ போன்ற வாகனங்களே பூர்த்தி செய்கின்றன. இதனை பயன்படுத்தி கொண்டு பலரும் திருப்புவனத்தில் ஷேர் ஆட்டோவை இயக்கி வருகின்றனர். மதுரை வெகு அருகில் இருப்பதால் திருப்புவனத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆட்டோ டிரைவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும், சட்டையில் பெயர் வில்லை பொருத்தியிருக்க வேண்டும் போன்ற விதிகள் உண்டு, ஆனால் திருப்புவனத்தில் சீருடை இன்றியும், பெயர் வில்லை அணியாமலும் பலரும் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.சாலையில் தாறுமாறாக ஆட்டோக்களை இயக்குவது, முன்னெச்சரிக்கை இன்றி திடீரென நிறுத்துவது. திடீரென திரும்புவது என நகரில் விபத்துக்களை ஏற்படுத்தி வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். வாரம்தோறும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் கோட்டை பஸ் ஸ்டாப்பின் இருபுறமும் வரிசையாக ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் அரசு பஸ்கள் நடுரோட்டில் நிற்க வேண்டியுள்ளது. ஷேர் ஆட்டோக்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்களோ போலீசாரோ எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தற்போது மாரியம்மன் கோயில் திருவிழாவும் தொடங்கியுள்ள நிலையில் ஷேர் ஆட்டோக்கள் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவிட்டது. ஆரம்பத்தில் ஒருசில ஆட்டோக்கள் இயங்கி வந்த நிலையில் திருப்புவனத்தில் 200க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பெருகி விட்டன. மாவட்ட காவல் துறை திருப்புவனத்தில் ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்தி தகுதியுள்ள உரிமம் பெற்ற நபர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,