அரசு விடுதிகளில் இரவு காவலர் துாய்மை பணியாளர் காலியிடம் அதிகரிப்பு
காரைக்குடி : காரைக்குடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர் அரசு விடுதிகளில் காலியாகவுள்ள இரவுக் காவலர் மற்றும் துாய்மை பணியாளர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் ,சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதி என 80 க்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இதில் பல விடுதிகளில் துாய்மை பணியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடம் காலியாக உள்ளது.விடுதிகளில் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தூய்மை பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. மேலும், பல விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமையலர் இல்லை.விடுதிகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வித்தரம் உட்பட பல பணிகளிலும் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. விடுதிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.