சாரல் மழையால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் அதிகரிப்பு; மாவட்ட அளவில் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி
திருப்புவனம்: மாவட்ட அளவில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேய்ச்சல் நிலங்களில் புற்கள் முளைத்துள்ளதால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடை வளர்க்கப்படுகிறது. மடப்புரம், திருப்பாசேத்தி, பழையனூர், செல்லப்பனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியன், கீழடி, கொந்தகை பகுதிகளில் கறவை மாடு, செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்டவைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. நான்கு வழிச்சாலை நகர விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறிய நிலையில் மேய்ச்சலுக்கு ஏற்ற நிலங்கள் இன்றி கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் செப்டம்பர் வரை நீடித்ததால் புற்கள் இன்றி மேய்ச்சல் நிலங்கள் வறண்டு காணப்பட்டன. செப்டம்பரில் விவசாய பணிகள் தொடங்குவதால் வாய்க்கால், வரப்புகளில் புற்கள் முளைக்கும், விவசாய பணிகளும் தொடங்காததால் அங்கும் புற்கள் இல்லை. எனவே கால்நடை வளர்ப்போர் சாலையோர வேம்பு, புளிய மரக்கிளைகளை பறித்து வந்து ஆடுகளுக்கு உணவாக வழங்கி வந்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விவசாய நிலங்கள், வரப்புகள் உள்ளிட்டவற்றில் புற்கள் முளைத்து பசுமையாக காட்சியளிக்கின்றது. சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு உணவு, தண்ணீருக்கு பிரச்னை இல்லை. கறவை மாடு, எருமை மாடு உள்ளிட்டவற்றிற்கு தீவனங்கள் வாங்கி வந்து வழங்கலாம். மழை காரணமாக விவசாய நிலங்கள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்கி இருப்பதால் ஆடுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் இல்லை. தற்போது பெய்த மழையால் கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கால்நடை வளர்ப்போர் கூறுகையில்: காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை செம்மறியாடுகள் மேய்ச்சலிலேயே இருக்கும் அப்போதுதான் விரைவில் எடை கூடும். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக புற்கள் முளைத்துள்ளன. மழை பெய்யாவிட்டால் ஊர் ஊராக ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் வேம்பு, புளி மர இலை, தழைகளை வெட்டி கொண்டு வந்து போட வேண்டும். ஒருசில ஆடுகள் வைத்திருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. 100 ஆடுகள் வைத்திருப்பவர்களுக்கு இது கட்டுப்படியாகாது என்றனர்.