கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இளையான்குடி அருகே இளமனுாரில் இரு சமூகத்தினரிடையே போர்டு வைப்பதில் பிரச்னை ஏற்பட்டு மோதிக்கொண்டனர். இதில் காயமடைந்த சிலர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாறி மாறி பல்வேறு இடங்களிலும் இரு சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள பசியாபுரம் பொட்டப்பாளையம், பாட்டம், கொந்தகை, முனியாண்டிபுரம், கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்கள் மிகவும் பதட்டத்திற்குரிய கிராமங்கள் ஆகும். இளமனூர் பிரச்னையை அடுத்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 26 கிராமங்களுக்கும் தலா இரண்டு போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஆவரங்காடு, கச்சநத்தம், மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் தலா இரண்டு போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூதாய ரீதியாக யாரும் போர்டு, கொடி கம்பம், பேனர் கட்ட கூடாது என கண்காணித்து வருகின்றனர்.