உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொருளாதார வளர்ச்சியில் இந்தியா விரைவில் 3ம் இடம்: கவர்னர் ரவி காரைக்குடியில் பேச்சு

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா விரைவில் 3ம் இடம்: கவர்னர் ரவி காரைக்குடியில் பேச்சு

காரைக்குடி: உலகளவில் 2014 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 11 வது இடத்தில் இருந்தது. 30 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தனர். இன்றைக்கு சிறந்த நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 4 வது இடத்திற்கு வந்துள்ளது. விரைவில் 3 வது இடத்திற்G வரும் என காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த தேசிய கருத்தரங்கு துவக்க விழாவில் தமிழக கவர்னர் ரவி பேசினார். அழகப்பா பல்கலையில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் அமர்வு சார்பில் 2047 ம் ஆண்டிற்குள் ''நல்லாட்சி மற்றும் நிலையான நிர்வாகத்திற்கான கட்டமைப்பை உருவாக்குதல்'' குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு துவக்க விழா நடந்தது. துணைவேந்தர் ஜி.ரவி வரவேற்றார். மத்திய அரசின் இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் தலைவர் வினய் பி.சகஸ்ரபுத்தே சிறப்புரை ஆற்றினார். காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தர் என்.பஞ்சநாதம், அமர்வு தலைமை பேராசிரியர் பி. தர்மலிங்கம், பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்கலை பதிவாளர் ஏ.செந்தில்ராஜன் நன்றி கூறினார். கருத்தரங்கிற்கு தலைமை வகித்து தமிழக கவர்னர் ரவி பேசியதாவது: நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு எவ்வாறு செயல்படுவது என்பதை இக்கருத்தரங்கு தெரிவிக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் நில வரிகளை வசூலிக்கவே கலெக்டர் தலைமையில் நிர்வாகத்தை உருவாக்கினர். சுதந்திரத்திற்கு பின்னரும் அதே நிலை தொடர்கிறது. அரசையும், மக்களையும் இணைக்கும் விதத்தில் நிர்வாகம் இருக்க வேண்டும். 4வது இடத்திற்கு முன்னேற்றம் 2014 ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 11 வது இடத்தில் இருந்தது. மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தனர். ஐந்தாண்டு திட்டம் மூலமே மக்களுக்கு சுகாதாரம், கல்வி, பொது போக்குவரத்து, மின்வசதி, கட்டமைப்பு, ரோடு, மின் உற்பத்தி போன்றவை ஏற்படுத்தப்பட்டது. இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 11 வது இடத்தில் இருந்து 4 வது இடத்திற்கு வளர்ந்துவிட்டது. மிக விரைவில்3 வது இடத்திற்கு வரும். 40 கோடி குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்கி, ஒவ்வொரு ஏழை குடும்பமும் இத்திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ வசதிகளை பெறுகின்றனர். அலோபதி மட்டுமின்றி சித்தா, ஆயுர்வேதிக் மருத்துவமும் வழங்கப்படுகிறது. நாட்டில் ஆயுஷ் மருந்து ஏற்றுமதி மூலம் 20 பில்லியன் டாலர் கிடைக்கிறது. உடல், மனதை வலிமையாக வைக்க யோகாவை ஊக்கப்படுத்துகிறோம். யோகாவை உலகளவில் அனைத்து நாடுகளும் வரவேற்கின்றன. நாட்டில் 70 லட்சம் பழங்குடியின மக்கள் இன்றைக்கும் கணக்கில் இல்லாதவர்களாக உள்ளனர். நிலங்களுக்கான பட்டா கூட அவர்களிடம் இல்லை. முத்ரா கடன் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம், வளர்ச்சியை நோக்கி செல்கிறோம். ஜன்தான் யோஜனா வங்கி கணக்கு, ஆதார் கார்டு அவசியமாகிவிட்டன. வங்கிகளில் பிணையின்றி கடன் வழங்கும் முத்ரா கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 2 கோடி பேருக்கு வங்கிகள் மூலம் முத்ரா கடன் தரப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் பேர் பெண்கள். இந்தியா சமத்துவ சமூகம் நிறைந்த நாடு என அறிக்கை ஒன்று சொல்கிறது. அடிப்படை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பெண்கள், இளைஞர், விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்கள், பழங்குடியினர் ஆகியோர் மாற்றம் பெற்றுள்ளனர். இன்றைக்கு நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட 'அட்டல் டிங்கரிங் ஆய்வகம்,' பள்ளிகளில் நிறுவப்பட்டு, மாணவர்கள், இளைஞர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா முதல் 3 வது இடத்தில் உள்ளது. இவ்வாறு பேசினார். அப்துல் கலாம் சிலைக்கு மரியாதை: முன்னதாக காரைக்குடி வந்த கவர்னரை, சிவகங்கை கலெக்டர் பொற்கொடி, எஸ்.பி., சிவபிரசாத், சப் கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வத்ஸ் வரவேற்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, பல்கலை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ