‛டிஜிட்டல் பயிர் சர்வே பணி ஊரகவளர்ச்சி துறை புறக்கணிப்பு சங்க மாநில தலைவர் தகவல்
சிவகங்கை:''ஏற்கனவே பணிச்சுமை அதிகரித்து வரும் நிலையில் பிற துறை பணியையும், எங்கள் மீது திணிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். இதனால் தமிழ்நாடு முழுவதும் டிஜிட்டல் பயிர் சர்வே' பணிகளை நாங்கள் புறக்கணிக்கிறோம்'' என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் டிஜிட்டல் பயிர் சர்வே' பணி வேளாண்மை, பொறியியல், தோட்டக்கலை, வேளாண் கல்லுாரி மாணவர்கள் மூலம் நடந்து வருகிறது. இதில் ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த ஊராட்சி செயலர், பி.டி.ஓ., துணை பி.டி.ஓ.,க்களும் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சர்வே பணியில் ஈடுபடும் கல்லுாரி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு, தேவையான தளவாடங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.அதுவே சாத்தியமற்ற செயலாக இருக்கையில், ஊரக வளர்ச்சித்துறையினர் மீது டிஜிட்டல் பயிர் சர்வே' பணியையும் திணிப்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே பணிச்சுமை அதிகரித்து வரும் நிலையில் பிற துறை பணியையும், எங்கள் மீது திணிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்.இதனால் தமிழ்நாடு முழுவதும் டிஜிட்டல் பயிர் சர்வே' பணிகளை நாங்கள் புறக்கணிகிறோம். இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர், இயக்குனருக்கு மனு அளித்துள்ளோம் என்றார்.