காரைக்குடியில் கடைகளுக்குள் புகும் மழை நீருடன் கூடிய சாக்கடை கழிவு வரத்து கால்வாய் சீராகுமா...
காரைக்குடி: காரைக்குடியில், மழைநீர் கடைகளுக்குள் புகுவதை தடுக்க வரத்து கால்வாய்களை சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. காரைக்குடி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சம்பை ஊற்று உள்ளது. சம்பை ஊற்றின் முக்கிய நீர் ஆதாரமாக காரைக்குடி பெரிய, அதலை, கோனேரி கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்களுக்கு வரக்கூடிய வரத்து கால்வாய் பலவும் ஆக்கிரமிப்பால் அழிந்து வருவதோடு, கழிவுநீர் கால்வாயாகவும் மாறி வருகிறது. காரைக்குடி வ.உ.சி., ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக பெரிய கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் நீண்ட அகலமான வரத்துக் கால்வாயாகும். காரைக்குடி முதல் போலீஸ் பீட், 2 வது போலீஸ் பீட், கண்ணன் பஜார், பர்மா பஜார், முத்துப்பட்டணம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் செல்ல வரத்து கால்வாய்கள் உள்ளன. இக்கால்வாய்கள் பலவும் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளன. தவிர கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் மூடி கிடப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் கடைகளுக்குள் புகுந்து விடுகிறது. தற்போது, மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் கால்வாய்களை சீரமைத்து மழைநீர் கடைகளுக்குள் செல்லாத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.