கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்காவிடில் பெயர் சேர்வது சிரமம்
சிவகங்கை: சிறப்பு தீவிர திருத்தப்பணி விண்ணப்பத்தை உரிய நேரத்தில் திரும்ப ஒப்படைக்காவிடில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் இடம் பெறுவதில் சிரமம் ஏற்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான விண்ணப்பங்கள் வீடு தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவர்களிடம் பெற்ற விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அவரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். தற்போது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். இதுவரை கணக்கீட்டு படிவம் கிடைக்கபெறாதவர்கள், வசிப்பிடம் சார்ந்த தாலுகா அலுவலகங்களில் உள்ள உதவி மையத்தை அணுகி, படிவத்தை பெற்று பூர்த்தி செய்து திரும்ப வழங்கலாம். இது வரை 90 சதவீத அரசு ஊழியர்களின் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து திருப்ப பெறப்படாமல் உள்ளது. இம்மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் தங்களது படிவங்களை பூர்த்தி செய்து தொடர்புடைய ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது குறித்த உதவிகள் தேவைப்பட்டால் படிவத்தில் ஓட்டுச்சாவடி அலுவலரின் அலைபேசி எண் இருக்கும். அந்தஎண்ணில் அழைத்து பயன்பெறலாம். இவற்றை பூர்த்தி செய்து ஒப்படைப்பதின் மூலம் அவரவர் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது உறுதியாகிறது. தற்போது ஒப்படைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற சிரமம் ஏற்படும் என்பதால், விரைவில் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என்றார்.