நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.12.20 லட்சம் மோசடி
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மதுரை நகைக்கடை உரிமையாளரிடம் நகை தருவதாக கூறி ரூ.12.20 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.தேவகோட்டை அருகேயுள்ள கோனாவயல் பகுதியை சேர்ந்தவர் சேகர் 38. இவர் 100 பவுன் நகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்து ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் பெற்றார். அந்த பணத்தை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.ஆனால் அந்த நிறுவனத்திடம் இருந்து பணம் திரும்ப கிடைக்காததால் நகையைதிருப்புவதற்காக மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சிவக்குமாரை 47, அணுகியுள்ளார். அவரிடம் வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பி தருவதாக கூறி ரூ.12 லட்சத்து 20 ஆயிரத்தை சேகர் பெற்றார். ஆனால் நகையை மீட்டு கொடுக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார் சிவக்குமார். இதனிடையே இப்பிரச்னையில் சேகர், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் வீரமுத்து 34, விளங்காட்டூர் செல்வக்குமார் ஆகியோர் மிரட்டியதாக , சிவக்குமார் தேவகோட்டை போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வீரமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனர். மற்ற இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.