கூட்டு குடிநீர் திட்ட பம்பிங் ஆப்பரேட்டர்கள் பணி நிரந்தரம் கோரி வாரியத்தில் முறையீடு
சிவகங்கை:தமிழகத்தில் செயல்படும் கூட்டு குடிநீர் திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் 15 ஆண்டுகள் பம்பிங் ஆப்பரேட்டர்களாக பணிபுரியும் 4,000 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியத்தில் முறையிட்டுள்ளனர். தமிழகத்தில் 554 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் 11 மாநகராட்சிகள், 65 நகராட்சிகள், 320 பேரூராட்சிகள், 48,498 ஊரக குடியிருப்புகளைச் சேர்ந்த 4.26 கோடி மக்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை அந்தந்த பகுதி நீரேற்று நிலையத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் 4,000 பம்பிங் ஆப்பரேட்டர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு இ.பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தம் போக மாதம் ரூ.9,000 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக இக்குடிநீர் திட்டங்களில் பணிபுரியும் பம்பிங் ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் இவர்கள் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து 480 நாட்கள் பணிபுரிவோரை நிரந்தரம் செய்து, பணிக்கொடை வழங்க வேண்டும். ஆனால், 15 ஆண்டுகளாக வேலை செய்தும் நிரந்தரம் செய்ய குடிநீர் வடிகால் வாரியம் முன்வரவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். குடிநீர் வடிகால் வாரிய பம்பிங் ஆப்பரேட்டர்கள் சங்க (சி.ஐ.டி.யு.,) மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் கூறியதாவது: பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிலாளர் நல வாரியத்தில் வழக்கு தொடர்ந்தோம். அவர்கள் பணிநிரந்தரம் செய்ய கூறினர். அந்த உத்தரவை ரத்து செய்ய வாரியம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தது. நீதிமன்றம், தொழிலாளர் நல வாரிய உத்தரவை உறுதி செய்தது. அதற்கும் வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், எங்களை பணிநிரந்தரம் செய்யுமாறு 2019 ம் ஆண்டிலேயே நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தீர்ப்பு வெளியாகி 5 ஆண்டு கடந்தும் பணிநிரந்தரம் செய்யவில்லை. தற்போது தான் அந்தந்த வாரிய செயற்பொறியாளர் மூலம் பம்பிங் ஆப்பரேட்டர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துகின்றனர் என்றார்.