பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் காரைக்குடி சங்கரபதி கோட்டை
காரைக்குடி: காரைக்குடி அருகே வரலாற்று சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.காரைக்குடி தேவகோட்டை நெடுஞ்சாலை அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை உள்ளது. இக்கோட்டையில் மருது சகோதரர்கள் பயிற்சி அளித்ததாகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் செய்ய ராணி வேலுநாச்சியார் மற்றும் ஹைதர் அலி போர்ப்படைகள் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.கம்பீரமாக காட்சியளித்த இக்கோட்டையானது முற்றிலும் சிதிலமடைந்து கிடந்தது. வரலாற்றுச் சின்னமான சங்கரபதி கோட்டையை புனரமைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.பாரம்பரிய கட்டடங்கள் புதுப்பிப்பு பணிக்காக சங்கரபதி கோட்டைக்கு அரசு ரூ.9.03 கோடி ஒதுக்கீடு செய்தது.பொதுப்பணித்துறையின் ஹெரிடேஜ் துறை சார்பில் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதம் இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பழமையான கோட்டை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுப் பணித்துறை ஹெரிடேஜ் அதிகாரிகள் கூறுகையில்:வனப்பகுதி என்பதால் முதலில் கோட்டையை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டது. தொடர்ந்து புதுப்பிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.கோட்டையில் உயரம் குறைவான அகலமான தூண்கள் உள்ளது. பழமையான முறையில் சுண்ணாம்பு கடுக்காய் கருப்பட்டி கலவை பயன்படுத்தப்படுகிறது.தவிர கேரளாவில் கிடைக்கக் கூடிய செம்புரான் கற்கள் போன்ற ஒரு வகை கற்கள் கொண்டு வரப்பட்டு கட்டட பணி நடந்து வருகிறது.